சலிக்க வைத்த மன்னா

பழைய ஏற்பாட்டை புதிதாக வாசிக்கத் துவங்கும் ஒருவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கும், “என்னது தேவதூதர்கள் சாப்பிடும் உணவை தேவன் மனிதருக்குத் தந்தாரா?”, தொடர்ந்து வாசித்துக்கொண்டே வந்தால் எண்ணாகமம் 11-ஆம் அதிகாரத்தில் அதைவிடப் பெரிய இன்னொரு ஆச்சரியமும் காத்திருக்கும், “என்னது அந்த உணவுகூட மனிதனுக்கு சலித்துப் போனதா?”
தொடர்ந்து ஒரே உணவை சாப்பிட்டுக்கொண்டே வந்தால் யாருக்கும் சலிப்பு தட்டத்தான் செய்யும், அது தவறல்ல, இஸ்ரவேல் மக்கள் இறைச்சி கேட்டதும் தவறல்ல, கர்த்தர் வழிநடத்தி வரும் அதிசயத்தையும், அவரது அன்பையும், அக்கறையையும் கண்டவர்கள் அவரிடம் இறைச்சியை உரிமையோடும், விசுவாசத்தோடும் கேட்டிருக்கலாம். மாறாக முறுமுறுத்து, அழுது, கலகம்பண்ணி, சாந்தமே உருவான மோசேயையே புலம்ப வைத்தபடியால் தேவகோபம் அவர்கள்மேல் பற்றி எரிந்து தண்டிக்கப்பட்டார்கள் என்று வாசிக்கிறோம்.
இங்கு கவனிக்க வேண்டிய வேறு ஒரு விஷயம் என்னவென்றால், தேவதூதர்கள் சாப்பிடும் பரலோக உணவே மனிதனுக்கு ஒருகாலகட்டத்தில் சலித்துப்போகுமென்றால் இந்த உலகத்தால் அவனை எப்படி திருப்திப்படுத்த முடியும்? தேவசாயலின் மகத்துவம் அதுதான். மனிதன் ஒரு அதிசயம், அவன் உடல்தான் மண்பாண்டமேயொழிய, உள்ளே அவன் ஒரு பிரம்மிக்கத்தக்க பிரம்மாண்டம்! இந்த உலகத்தால் அவனுக்கு தீனிபோட்டு மாளாது. இந்த உலகத்தின் இன்பங்களைக் காட்டி அவனை தேவனை விட்டு பிரித்துவிடலாம் என்று நினைக்கும் பிசாசின் project எவ்வளவு கடினமானது பாருங்கள்! ஒரு யானைப் பண்ணைக்குக்கு தீனிபோட்டு திருப்திப்படுத்த நினைக்கும் ஒரு சராசரி மூடனின் நிலைதான். எல்லாவற்றையும் தின்று ஏப்பம் விட்டுவிட்டு, “இவ்வளவுதானா?” என்று கேட்பான். பிசாசு அவன் முன்னால் ஒருநாள் வெறுங்கையனாய் நிற்க வேண்டியதுதான்.
சாலமோனை வைத்து தேவன் சாத்தானுக்கு ஒரு சாம்பிள் காட்டினார் என்றுதான் சொல்லமுடியும். உலகின் எல்லா ஆசீர்வாதங்களையும் ஆண்டு அனுபவித்துவிட்டு “எல்லாம் மாயையும், மனதுக்கு சஞ்சலமுமாய் இருக்கிறது (பிரசங்கி 2)” என்று ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போய்விட்டான். அது தேவனுக்கு ஏமாற்றமல்ல, பிசாசுக்குத்தான் ஏமாற்றம்!
சாலமோனின் தகப்பனை வைத்து தேவன் சாத்தானுக்கு இன்னொரு சாம்பிளும் காட்டினார், யூதேயாவின் வறண்டதும், விடாய்த்ததும், தண்ணீரற்றதுமான வனாந்திரத்தில் வைத்து தாவீதுக்கு தமது கிருபையின் ருசியை மட்டும் கொஞ்சம் காட்டினார். அதை ருசித்த தாவீதோ, “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது கர்த்தாவே!, நிணத்தையும், கொழுப்பையும் உண்டதுபோல திருப்தியாகிவிட்டேன்” என்று துள்ளிக் குதித்துவிட்டான். திரித்துவ தேவனோடு உள்ள ஐக்கியத்தையும், அவரது நேசத்தையும் தவிர மனிதனை வேறு எதுவுமே திருப்திப்படுத்தாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும் (உன் 8: 6,7)
தேவனிடத்தில் திருப்தியடைந்தவன் எந்த தேன்கூட்டையும் மிதிப்பான். எதையாவது காட்டி, எப்படியாவது மனிதனை திருப்திப்படுத்தி, அவனை தேவனை விட்டு பிரித்துவிடலாம் என்று கனவுகாணும் சாத்தானிடம் ஒன்றே ஒன்று மட்டும்தான் சொல்ல முடியும், இப்போதய trend-இல் சொன்னால் “வாய்ப்பில்ல ராஜா..வாய்ப்பில்ல”