ஒரசாம ஓடிடு

ஒரசாம ஓடிடு

“அல்லாஹூ மாபெரும் சூழ்ச்சிக்காரன்” என்று குரானில் ஒரு வசனம் உள்ளது(அல்குரான் 8:30). சூழ்ச்சிக்காரன் என்பதை எதிர்மறையாக சொல்லாமல் “கடவுள் போர் வியூகம் வகுப்பதில் தலைசிறந்தவர்” எனும் பொருளில் அந்த வசனம் சொல்கிறது. அது நேரடியாக சொல்லவருவது என்னவென்றால் “ஒரசாம ஓடிடு” என்பதாகும். இங்கு குரான் வசனத்தை ஏன் மேற்கோள் காட்டியிருக்கிறேன் என்றால் கடவுளின் ஒரு சுபாவத்தை பட்டவர்த்தனமாக, அப்பட்டமாக கூறியிருப்பதுதான். சூழ்ச்சி செய்தல் என்பது எதிர்மறையான அர்த்தத்தை கொடுத்துவிடும் என்பதால் வேதாகமத்தை எழுதியவர்கள் அதுபோன்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாம்.

கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்(யாத் 15:3)

யுத்தத்தில் வல்லவர் என்பது அவருடைய புயபலத்தை மட்டும் குறிக்காமல் வியூகம் வகுக்கும் திறனையும் குறிப்பிடக்கூடியதாக இருக்கிறது. மாபெரும் வல்லரசுகளையும், யுத்த சேனைகளையும் அவர் யுத்தங்களில் left hand-இல் டீல் பண்ணி, அவர்களை அடிமுட்டாள்களாக்கி வீழ்த்தியதை பழைய ஏற்பாடு முழுவதிலும் நாம் வாசிக்கலாம். நான் கர்த்தரிடத்தில் மிகவும் இரசிக்கும் குணங்களில் ஒன்று யுத்தங்களில் அவர் காட்டும் அந்த அசாத்திய அறிவுத்திறன்தான்.

இரண்டு பேர் புயபலத்தில் மோதிக்கொள்ளும்போது வென்றவன், தோற்றவன் இவருமே கனத்துக்குரியவர்கள். ஏனெனில் இருவருமே வீரர்கள். எப்போது தோற்றவன் இகழப்படுவானென்றால் அவன் முட்டாளாக்கப்பட்டு வீழ்த்தப்படும்பொழுதே! யுத்தத்தில் வீரம் மட்டுமல்ல, விவேகமும் வேண்டும். கர்த்தரோடு யுத்தம் செய்து வீழ்ந்தவன் எவனுமே இதுவரை கனத்துக்குரியவனாய் வீழ்ந்ததில்லை. காரணம் விவேகமுள்ளவன் எவனும் கர்த்தரோடு யுத்தங்கலக்க மாட்டான்.

அதிகாரத் திமிரில் ஆடிய பார்வோனை ஆழ்கடலுக்கு இழுத்து அமிழ்த்தியதிலிருந்து, ஆராதனைக்கு ஆசைப்பட்ட ஏரோதை புழுக்களுக்கு இரையாக்கியதுவரை வேதாகமம் முழுவதிலும், வரலாற்றிலும்கூட அவரை எதிர்த்து கலகம் செய்தவன் எவனும் கனத்தோடு மடிந்ததில்லை.

ஆதியில் ஒருவன் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு “நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன், வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன்(ஏசா 14:13,14)” என்று சொன்னான். அவன் கதை “புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை(ஏசா 13:11)” என்று இகழ்ச்சியில் முடிந்தது. அதென்னவோ லூசிபர் முதல் ஏரோது வரை சுயஆராதனைக்கு ஆசைப்படும் அத்தனைபேரின் கதையும் புழுக்களோடுதான் முடிவடைகிறது.

கர்த்தரை மட்டுமே சார்ந்திருக்கும் அவருடைய பிள்ளைகளோடு போராடுபவர்களின் முடிவும் அப்படியே இருக்கும். சாதாரண நேரங்களில் இளைப்பாறிக்கொண்டிருக்கும் உலகத்தான் யுத்த நேரங்களில்தான் பிஸியாக மாறுவான். காரணம் அவனுக்காக அவன்தான் போராடியாக வேண்டும். ஆனால் சாதாரண நேரங்களில் பிஸியாக இருக்கும் தேவபிள்ளை மனிதன் யுத்த நேரத்தில்தான் இளைப்பாறத் தொடங்குவான். காரணம் அவன் செய்துகொண்ட தெரிவு அப்படி.

உங்களோடு போராடும் எந்த சத்துருவோடும் நீங்கள் மாம்சத்தோடு போராடாதீர்கள். அதில் நீங்கள் வென்றாலும் தோற்றாலும் விசேஷம் ஒன்றுமில்லை. உங்கள் யுத்தங்களை கர்த்தரிடம் ஒப்புக்கொடுங்கள். அவர் தனது எந்த யுத்தத்திலும் தன் எதிரியை கனத்துடன் வீழ விடமாட்டார். அது வீழ்த்தப்பட்டவர்களுக்கே நன்மையாகவும் முடியக்கூடும். இங்குதான் கர்த்தருடைய ஞானமும், அன்பும் சேர்ந்து ஜெயிக்கிறது. தன் அதிகார மமதையில் பவுலோடும், சீலாவோடும் உரசினான் ஒரு சிறைச்சாலைத் தலைவன். தனக்குப் பின்னால் ஒரு பேரரசு இருக்கிறது என்கிற திமிர் அவனுக்கு. அப்பாவிகளான பவுல், சீலாவின் கால்களை தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.

கர்த்தர் யுத்தத்தில் இறங்கினார். அவனுடைய ரோமப் பேரரசு சிறையில் அடைத்து, விலங்கு பூட்டிவைக்குமென்றால் தன்னுடைய இறையரசு வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறிக்கும் என்று அவனுக்குக் காட்டினார். முடிவில் அவன் தான் ஒரு மூடன் என்பதை உணர்ந்தான். எந்தக் கால்களை தொழுமரத்தில் மாட்டி வைத்தானோ அதே கால்களில் விழுந்து கதறினான்.

ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்(அப் 16:30)…

நாம் நம்முடைய சுயபெலத்தில் செய்யும் யுத்தங்களெல்லாம் தாறுமாறாகத்தான் முடியும். ஆனால் கர்த்தர் தான் இறங்கும் யுத்தம் ஒவ்வொன்றையும் வரலாறாகத்தான் முடிப்பார். அது சில நேரங்களில் வீழ்த்தப்பட்டவர்களுக்கே நன்மையாகவும், அவர்களது இரட்சிப்புக்கு ஏதுவாகவும் முடியக்கூடும். நமக்கும் அதுதானே தேவை!

எது எப்படியிருந்தாலும் ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எடுக்கும் மகா தவறான முடிவு என்னவெனில் அது தேவனோடும், அவரது சபையோடும், அவரது பிள்ளைகளோடும் யுத்தம் கலப்பதுதான். முடிவில் தான் ஒரு அடிமுட்டாள் என்பதை அவன் உணர்ந்தே தீருவான். அந்த யுத்தத்தின் முடிவில் கர்த்தர் அவனைக் கொண்டு உலகத்துக்குக் கற்றுத்தரும் எச்சரிக்கைப் பாடம் ஒன்றுதான்…

“ஒரசாம ஓடிடு”

Leave a Comment